×

2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி 26 ரபேல் விமானம் வாங்குகிறது இந்தியா: மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும் முடிவு; ரூ.85 ஆயிரம் கோடி ஒப்பந்தத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று பாரீஸ் சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து, அந்நாட்டிடம் இருந்து ரூ.85 ஆயிரம் கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஓட்டல் முன்பாக ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு, ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, தனது இந்த பயணம் இருதரப்பு உறவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என டிவிட்டரில் நம்பிக்கை தெரிவித்தார். 2 நாள் பயணத்தில் அவர் இந்திய புலம்பெயர்ந்தோர், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச உள்ளார்.

பயணத்தின் முக்கிய நிகழ்வாக இன்று நடக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதோடு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரான்சின் டசால்ஸ்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை வாங்கி உள்ளது. தற்போது கடற்படைக்கான மேலும் 26 ரபேல் விமானங்களும், 3 நீர்மூழ்கி கப்பல்களும் பிரான்சிடமிருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சிடம் இருந்து கூடுதலாக 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.80 ஆயிரம் கோடி முதல் ரூ.85 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை இந்தியா திரும்பும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளார். இந்தியா, பிரான்ஸ் நட்புறவின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை கவுரவ அழைப்பாளராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* மூன்று ஆண்டில்…
பிரான்சிடமிருந்து 26 ரபேல் விமானங்கள் இந்திய கடற்படைக்காக வாங்கப்பட உள்ளது. இதில் 4 விமானங்கள் பயிற்சி விமானங்களாக இருக்கும். விமானங்களின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதால் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து முடிக்க ஓராண்டு ஆகலாம் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். அதே சமயம், ஒப்பந்தம் கையெழுத்திட்ட 3 ஆண்டுகளுக்குள் 26 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினார்.

* ஐஎன்எஸ் சென்னை பங்கேற்பு
பாரீசில் இன்று நடக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பில், இந்திய முப்படையை சேர்ந்த 269 வீரர்கள் பங்கேற்று அணிவகுப்பு நடத்த உள்ளனர். மேலும், 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் விமானப்படை விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அதோடு, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலும் பங்கேற்க உள்ளது. இதற்காக ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் நேற்று பிரான்சின் பிரஸ்ட் துறைமுகத்தை சென்றடைந்தது.

* ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும்
பிரான்ஸ் ஊடகங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதில் இந்தியாவின் பதவி குறித்து பேசியதாவது: அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா, உலகில் தனக்கான சரியான இடத்தை பெற வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி என்பது நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை மட்டுமல்ல; அதை விட மிகப்பெரியது. அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் அதன் மிகப்பெரிய ஜனநாயகமும் நிரந்தர உறுப்பினராக இல்லாத நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உலகத்திற்காக பேசுவதாக எப்படி கூற முடியும்?

The post 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி 26 ரபேல் விமானம் வாங்குகிறது இந்தியா: மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும் முடிவு; ரூ.85 ஆயிரம் கோடி ஒப்பந்தத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,France ,India ,Union government ,Paris ,Modi ,National Day ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...